தங்க மீன்கள் - விமர்சனம்!

சுட்டெரிக்கும் பாலைவனத்தில் பயணம் செய்யும் போது ஒரு மழைத்துளி நம் மீது விழுந்தால் இதயம் பரவசப்படுமே, அந்த பரவசத்தின் உணர்வு தான் தங்க மீன்கள். அப்பா மகள் உறவை சொல்லும் படங்களை இதற்கு முன்பு பார்த்ததுண்டு, ஆனால் சுதந்திரப் பறைவகளாய் சுற்றித்திரியும் அப்பா மகளை ஒளிப்பதிவாலும் இசையாலும் பிரம்மிப்பை சேர்த்து இதயத்தின் பக்கங்களை கவிதைகளால் களாவாடுகிறது தங்க மீன்கள். 


தமிழ் படித்தவனை இந்த சமூகம் எப்படி நடத்துகிறது என்ற கருத்தோடும் கண்கலங்க வைக்கும் ஒரு க்ளைமாக்ஸோடும் கற்றது தமிழ் என்ற முதல் படத்தைக் கொடுத்தவர் ராம். இதில் குழந்தைகளையும் பெற்றோர்களையும் கேவலமாக நடத்தும் தனியார் பள்ளிகளின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு அரசுப் பள்ளிகளின் அவசியத்தையும் சொல்கிறார். தனியார் பள்ளிகளில் மாணவர்களின் வில்லனாக திகழும் ஆசிரியர்களுக்கு நல்ல பாடம் எடுத்திருக்கிறார் இயக்குனர் ராம். 

மலைகள் நிறைந்த இடத்தில் ஒரு அழகான வீடு, அருகே ரயில்பாதை, அங்கே ஒரு குளம், அதில் நீந்தும் தங்க மீன்கள் என பசுமையான களத்தில் ஒரு பாசப்போராட்டத்தை நடத்துகிறார் இயக்குனர் ராம். தந்தைக்குப் பிடிக்காத மகனாகவும் மகளுக்கு பிடித்த அப்பாவாகவும் ராம் (கல்யாணி). தன் மகளோடு அதிக நேரத்தை செலவிட நினைக்கும் ராம் ஒரு நிலையான வேலை இல்லாமல் திண்டாடுகிறார்.

சாவைப் பற்றி விளக்கம் கேட்டுவிட்டு ‘நீ மட்டும் செத்துப்போக கூடாதுப்பா...’ என்று சொல்லும் அன்பு மகளாக சாதனா (செல்லம்மா). ராம், வசதியான குடும்பமாக இருந்தாலும் தான் அதிகம் சம்பாதிக்க முடியாததால் தன் தந்தையிடம் வீட்டில் சில அவமானங்களை சந்திக்க நேரிடுகிறது. 

தன் மகளின் பள்ளி படிப்பிற்கான கட்டணத்தை கூட செலுத்த முடியாத நிலையில் இந்த சமூகத்தின் முன்பு கோழையாய் நிற்கிறார் ராம். ரோஷத்தின் காரணமாக தந்தை கொடுத்த பணத்தையும் வாங்க மறுக்கிறார். நண்பனிடம் கடன் கேட்கிறார். இன்று, நாளை... என்று சொல்லி கைவிடுகிறார் நண்பர்.


ஒரு நாள் வீட்டில் அவமானப்படுத்தப்பட அதை தாங்கமுடியாமல் தன் மகள் மனைவியோடு வீட்டைவிட்டு வெளியேற நினைக்கிறார். மனைவி அவரோடு வர மறுக்கிறார். மகளையும் தர மறுகிறார். கோபம் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய ராம் கேரளாவின் கொச்சிக்கு போய் வேலை ஒன்றில் சேர்கிறார்.  

சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியோடு சோறு தண்ணி இல்லாமல் இரவு பகலாக வேலை செய்கிறார். மகளிடம் தொலைபேசி உரையாடல்கள் தொடர்கின்றன. நீ வரும்போது எனக்கு வோடோஃபோன் நாய்குட்டி வாங்கிட்டு வரியாப்பா... என்று மகள் அன்புக் கட்டளை போட. சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக்கொண்டு நாய் வங்க புறப்படுகிறார். அந்த நாய் குட்டியின் விலை 20,000 என்று அறிந்து கதிகலங்கி நிற்க, மகளின் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று துடிக்கிறார். 

கேரளாவில் இருக்கும் நண்பர் மூலமாக அங்கே இருக்கு கலைக்கூடம் வைத்திருக்கும் வெளிநாட்டவர்களின் அறிமுகம் கிடைக்கிறது. ஒரு புகைப்படத்தைக் காட்டி, இது ஒரு பழங்கால இசை கருவி, இது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடடாது, இதை கொண்டுவந்தால் 20,000 பணம் தருகிறோம் என்று சொல்கிறார்கள்.


பல சிரமங்களுக்கு உட்பட்டு பல மையில்களுக்கு அப்பால் இருக்கும் காடுகள் தாண்டி, மலைகள் தாண்டி இருக்கும் அந்த மலைக்கிராமத்தை கண்டுபிடிக்கிறார். தன் வீட்டிற்கு மகள் கேட்ட நாயோடு வரும்போது வீட்டில் மகள் இல்லை... தன் மகளை எங்கே கண்டுபிடித்தார் என்பது கண்களை ஈரமாக்கும் க்ளைமாக்ஸ்.  
  
காட்சிகள் மட்டுமல்ல ஒவ்வொரு ஃப்ரேமும் கதை சொல்கிறது. தைரியமான இயக்குனர் மட்டுமல்லாமல் துணிச்சலான நடிகர் என்பதையும் நிரூபித்துவிட்டார் ராம். இந்த சமூகம் நீ ஒரு கையாலாகாதவன் என்று குற்றம் சொல்லும் போதும், கோபமாக வசனம் பேசும் காட்சிகளிலும் ராம் நடிப்பில் நின்றுவிட்டார். (ராமை நடிக்க சொன்ன தயாரிப்பாளர் கௌதம் மேனனுக்கு நன்றி). தன் மகளின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் நேரம் நான் நல்ல அப்பா இல்லை என்று கன்னத்தில் அடித்துக் கொண்டு அழும் இடத்தில் சபாஷ் வாங்குகிறார் ராம்.

தவழும் தென்றலாய்... உலவும் நிலவாய்... பூமழையாய்... பனித்துளியாய்... கவிதையைபோல காட்சியளிக்கிறார் மகள் சாதனா. அப்பா மகளாகவே வாழ்ந்திருக்கிறார்கள் இருவரும். இந்த உலகத்தில் யாரைவிடவும் அப்பாவின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கும் மகளாய், மகளின் நம்பிக்கையை சிதைத்துவிடக் கூடாது என நினைக்கும் அப்பாவாய் பாசத்திலும் நடிப்பிலும் ராம் மற்றும் சாதனா போட்டிபோடுகிறார்கள்.


மலைகள் சூழ்ந்த பகுதியில் அழகிய நீரோடையாக படத்தில் காட்சியளிக்கும் பத்மபிரியா(எவிட்டா மிஸ்) குறைவான நேரம் வந்தாலும் ஆழமான நடிப்பு. 

தனியார் பள்ளியில் தேர்வு நடக்கும் போது பின்னால் அதே பள்ளியின் கட்டிட பணிகள் நடப்பது, கண்டித்து கன்னத்தில் அறையும் தந்தை மகன் இல்லாத நேரத்தில் கண்ணீர் விடுவது, எவிட்டா டீச்சரைத் தேடிப்போகும் போது ஒலிக்கும் கிறிஸ்துவப்பாடல், தன் மகளிடம் கிறிஸ்துமஸ் தாத்தா போல பேசி மகிழ்வது, தன் தங்கையின் சாக்லேட் வாங்கி செல்வது என தங்க மீன்களின் கவிதையில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கி இருக்கிறது.  

காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு தாங்க என ஆசிரியர் ராமிடம் சொன்னதும் ’காக்கா வந்து உங்க கிட்ட சொல்லுச்சா மிஸ்... காக்கா வந்து உங்க கிட்ட வந்து சொல்லுச்சா?’ என ராம் கேட்பதும்,  ராமின் தங்கை அவரிடம் ’20000 ரூபாய்க்கு நாய் வாங்கி தேவையில்லாம செலவு பண்ணனுமா?’ என்றதும் ’அவ்வளவு செலவாகும்னு தெரிஞ்சா கேட்டிருக்கமாட்டா... டி.வி-ல விளம்பரம் போடும்போது அந்த நாயோட விலை சொல்லியா போட்றாங்க?’ என்ற சில வசனங்களில் மனசு விசிலடித்து கைதட்டியது.


காடு தாண்டி... மலை தாண்டி... இசைக்கருவியை கண்டுபிடிக்கும் காட்சிகள் அம்புலி மாமா கதை சொல்லி ஏமாற்றுவது போல் இருக்கிறது என்பது மட்டுமே படத்தின் ஒரே குறை. நிறைகள் நிறைய இருப்பதால், குறையை தள்ளிவைப்பதில் தயக்கம் வேண்டாம். ராமின் மனைவியாக வரும் ஷெல்லி கிஷோர், ராமின் அம்மாவாக வரும் ’சிரிக்காத ஆச்சி’ ரோகினி, ராமின் அப்பாவாக வரும் ’பூ’ ராம் என திரைப்படத்தின் மற்ற கதாபாத்திரங்களும் மனதில் பதிகிறது. 

இத்திரைப்படத்தின் இராட்சத பலமாய் திகழ்வது யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. யுவன் கி-போர்டில் கவிதை வாசிக்கிறார் என்றால், ஒளிப்பதிவாளர் அர்பிந்துசாரா கேமராவில் கவிதை வாசிக்கிறார். ‘ஆனந்த யாழை...’ பாடல் கேட்பவர்களையும் பார்ப்பவர்களையும் ஆனந்த மழையில் நனைக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. 

தங்க மீன்கள் - கண்களை குளமாக்கும் அழியாத கவிதை!

'அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன்’..... - ஹைதராபாத்திலிருந்து அஞ்சலி கடிதம்!

டிகை அஞ்சலி திடீரென மாயமாகி திரையுலகில் அவ்வப்போது பரபரப்பை கிளப்பிவிடுகிறார். முன்பு மாயமான போது சித்தியால் பல தொந்தரவுகளுக்கு ஆளானேன் என ஒரு பெரிய பூகம்பத்துடன் திரும்பி வந்தார்.


சமீப காலமாக திரையுலகில் எங்கும் காணப்படாமல், அஞ்சலி, விஷால் நடிப்பில் வெளியாகவிருக்கும் மதகஜராஜா திரைப்படத்தின் புரமோஷனுக்கும் கூட தலைகாட்டாமல் ஹைதராபாத்திலே இருந்துவந்தார்.

இந்த சமயத்தில் தான் அஞ்சலிக்கும் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணமாகிவிட்டது என்ற தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம், ஆந்திரா, கேரள என பல மாநிலங்களிலும் இந்த செய்தி தீயாய் பரவ, தற்போது ஹைதராபாத்திலிருந்து ஊடகங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார் அஞ்சலி.


அந்த கடிதத்தில் ” அன்புடையீர் வணக்கம்... கற்றது தமிழ் படம் துவங்கி இன்று வரை பல்வேறு காலகட்டங்களில் என்னை ஆதரித்து ஊக்கமளித்த அனைத்து ஊடகங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி... சமீபத்தில் நான் சுந்தர்.C இயக்கத்தில் விஷாலுடன் நடித்த மதகஜராஜா படத்திற்கு டப்பிங் பேச மறுப்பதாகவும், படம் சம்மந்தமான விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர மறுப்பதாகவும் செய்திகளும், அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் இணைத்தும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அது முற்றிலும் தவறான தகவல் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இனி வரும் காலங்களில் என்னைப் பற்றிய செய்திகளுக்கு விளக்கம் தேவைப்படும் எனில் என்னுடைய newsfromanjali@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி! வணக்கம்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


அஞ்சலி அனுப்பிய கடிதம் ரசிகர்களின் பார்வைக்கு : 


அஜித் - ஹரி இணையும் ’அடங்காதவன்’!



சிங்கம் 2 திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஹரி எந்த ஹீரோவை வைத்து எந்த மாதிரியான திரைப்படம் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகமாகவே காணப்பட்டது.


அதேபோல் ‘ஆரம்பம், ‘வீரம்’ என அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் இரு படங்களைப் பற்றியும் தெரிந்துவிட்டதால், அஜித்தின் அடுத்த படம் பற்றியும் ரசிகர்கள் எதிர்பார்க்க துவங்கிவிட்டனர். இந்நிலையில் ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அஜித்-ஹரி கூட்டணியில் ‘அடங்காதவன்’ திரைப்படத்தை தயாரிப்பதாக ஒரு போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த போஸ்டர் உண்மையானதாக இருந்தால் அஜித்தும், ஹரியும் இணையும் முதல் திரைப்படம் அடங்காதவன். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக கூறப்படும் இத்திரைப்படத்தின் ஹீரோயின் யார் என்பது தெரியவில்லை. விஷ்ணுவர்தன் திரைப்படத்தில் செய்தது போல் இல்லாமல் டைட்டிலை முதலில் தெரிந்து கொண்டுவிட்டதால் ரசிகர்கள் திருப்தியில் இருக்கின்றனர்.

மேலும் அடங்காதவன் என்ற டைட்டில் அஜித்தின் உண்மையான குணாதசியங்களில் ஒன்று என்று சுட்டிக் காட்டுவதோடு, அஜித்தின் கெட்-அப்பை பார்த்து மிரண்டுபோயிருக்கிறார்கள் ரசிகர்கள்.

”என் ரசிகர்கள் சோதனைகளை சாதனையாக்க வேண்டும்” - ஜாமீனில் வெளிவந்த பவர்ஸ்டார் பேட்டி!

லத்திகா திரைப்படத்தின் மூலம் உலகம் முழுக்க பிரபலமானதாக்(!) கூறப்படும் பவர்ஸ்டார் சீனிவாசன் கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் மூலம் உண்மையிலேயே பல ரசிகர்களை கவர்ந்தார்.


வருங்கால முதல்வர், இந்திய ஜனாதிபதி என்பதையெல்லாம் தாண்டி எதிர்கால அமெரிக்க ஜனாதிபதி என்று ரசிகர்களால்(!) பாராட்டப்பட்ட பவர்ஸ்டார் சீனிவாசன் சில மாதங்களாக பண மோசடி வழக்கில் சிறையில் தள்ளப்பட்டார்.பவர்ஸ்டார் சிறையில் இருந்தபோது அவர் நடித்த ஆர்யா சூர்யா திரைப்படத்தின் நிகழ்ச்சிகள் நடந்துவிட்டதால், இத்திரைப்படத்தைப் பற்றி அவரால் ரசிகர்களுக்கு எதுவும் கூற முடியவில்லை.

ரசிகர்கள், உறவினர்களை சந்திக்க இரண்டு நாள் ஜாமீனில் வெளிவந்த பவர்ஸ்டார் அளித்த பேட்டியில் “ரொம்ப பில்டப் குடுத்து தான் நான் இந்த நிலைமைக்கு வந்து நிக்குறேன். ஆர்யா சூர்யா திரைப்படத்தில் நான் ஹீரோ கேரக்டரில் நடித்திருக்கிறேன். என் மீதுள்ள நம்பிக்கையில் என்னை வைத்து இரண்டு படங்கள் எடுத்திருக்கும், என்னுடைய காட்ஃபாதர் ராமநாராயணன் சாருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.


ராமநாராயணன் சார் வழக்கமாக அனிமல்ஸை வைத்து படமெடுப்பார். ஆனால் அவரது 126-வது திரைப்படத்தில் என்னையும், விஷ்ணு ப்ரியனையும் வைத்து எடுத்திருக்கிறார். என் ஆனந்தத் தொல்லை திரைப்படம் கோச்சடையானுடன் தீபாவளியன்று எதிர்பார்க்கலாம்” என்று கூறினார்.

மேலும் டெல்லி ஜெயிலில் இருந்த அனுபவம் பற்றி கேட்டபோது “நான் ஜெயிலில் இருந்த போது கிட்டத்தட்ட 1500 ரசிகர்கள் வந்து என்னை பார்த்துவிட்டுச் சென்றனர். ஒரு நடிகனாக சென்றதால் ஜெயிலில் எனக்கு நல்ல மரியாதை கிடைத்தது. சினிமா தொடர்பு இல்லாமல் நான் சாதாரணமாக சென்றிருந்தால், வேறு மாதிரி கவனித்திருப்பார்கள். எனவே நான் சினிமாவை நிறைய நேசிக்கிறேன்” என்றார்.


கடைசியாக உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் என்ன மெஸேஜ் சொல்ல நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு “இன்பத்தை மட்டுமே அனுபவிப்பது வாழ்க்கை இல்லை. துன்பங்களையும் சரிபாதியாக அனுபவிக்க வேண்டும்.  சோதனைகளையும் சாதனையாக்கி வெற்றிபெற வேண்டும். திரைப்படங்களுக்கு வரும் பிரச்சனைகளால் தயாரிப்பாளர்களுக்குத் தான் பாதிப்பு அதிகம். அவர்களுக்கு என் அனுதாப வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிலளித்தார்.

ஆர்யா சூர்யா படத்தில் ‘வட போச்சே’ என்ற பாடலை பாடியிருக்கிறார் பவர்ஸ்டார். மேலும் ‘சூப்பர்ஸ்டார் யாரு... இந்த பவர்ஸ்டார பாரு...’ என்ற பாடலுக்கு அதிரடியாக நடனமாடியிருக்கிறாராம்.


Powered by Blogger.