தங்க மீன்கள் - விமர்சனம்!

சுட்டெரிக்கும் பாலைவனத்தில் பயணம் செய்யும் போது ஒரு மழைத்துளி நம் மீது விழுந்தால் இதயம் பரவசப்படுமே, அந்த பரவசத்தின் உணர்வு தான் தங்க மீன்கள். அப்பா மகள் உறவை சொல்லும் படங்களை இதற்கு முன்பு பார்த்ததுண்டு, ஆனால் சுதந்திரப் பறைவகளாய் சுற்றித்திரியும் அப்பா மகளை ஒளிப்பதிவாலும் இசையாலும் பிரம்மிப்பை சேர்த்து இதயத்தின் பக்கங்களை கவிதைகளால் களாவாடுகிறது தங்க மீன்கள். 


தமிழ் படித்தவனை இந்த சமூகம் எப்படி நடத்துகிறது என்ற கருத்தோடும் கண்கலங்க வைக்கும் ஒரு க்ளைமாக்ஸோடும் கற்றது தமிழ் என்ற முதல் படத்தைக் கொடுத்தவர் ராம். இதில் குழந்தைகளையும் பெற்றோர்களையும் கேவலமாக நடத்தும் தனியார் பள்ளிகளின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு அரசுப் பள்ளிகளின் அவசியத்தையும் சொல்கிறார். தனியார் பள்ளிகளில் மாணவர்களின் வில்லனாக திகழும் ஆசிரியர்களுக்கு நல்ல பாடம் எடுத்திருக்கிறார் இயக்குனர் ராம். 

மலைகள் நிறைந்த இடத்தில் ஒரு அழகான வீடு, அருகே ரயில்பாதை, அங்கே ஒரு குளம், அதில் நீந்தும் தங்க மீன்கள் என பசுமையான களத்தில் ஒரு பாசப்போராட்டத்தை நடத்துகிறார் இயக்குனர் ராம். தந்தைக்குப் பிடிக்காத மகனாகவும் மகளுக்கு பிடித்த அப்பாவாகவும் ராம் (கல்யாணி). தன் மகளோடு அதிக நேரத்தை செலவிட நினைக்கும் ராம் ஒரு நிலையான வேலை இல்லாமல் திண்டாடுகிறார்.

சாவைப் பற்றி விளக்கம் கேட்டுவிட்டு ‘நீ மட்டும் செத்துப்போக கூடாதுப்பா...’ என்று சொல்லும் அன்பு மகளாக சாதனா (செல்லம்மா). ராம், வசதியான குடும்பமாக இருந்தாலும் தான் அதிகம் சம்பாதிக்க முடியாததால் தன் தந்தையிடம் வீட்டில் சில அவமானங்களை சந்திக்க நேரிடுகிறது. 

தன் மகளின் பள்ளி படிப்பிற்கான கட்டணத்தை கூட செலுத்த முடியாத நிலையில் இந்த சமூகத்தின் முன்பு கோழையாய் நிற்கிறார் ராம். ரோஷத்தின் காரணமாக தந்தை கொடுத்த பணத்தையும் வாங்க மறுக்கிறார். நண்பனிடம் கடன் கேட்கிறார். இன்று, நாளை... என்று சொல்லி கைவிடுகிறார் நண்பர்.


ஒரு நாள் வீட்டில் அவமானப்படுத்தப்பட அதை தாங்கமுடியாமல் தன் மகள் மனைவியோடு வீட்டைவிட்டு வெளியேற நினைக்கிறார். மனைவி அவரோடு வர மறுக்கிறார். மகளையும் தர மறுகிறார். கோபம் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய ராம் கேரளாவின் கொச்சிக்கு போய் வேலை ஒன்றில் சேர்கிறார்.  

சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியோடு சோறு தண்ணி இல்லாமல் இரவு பகலாக வேலை செய்கிறார். மகளிடம் தொலைபேசி உரையாடல்கள் தொடர்கின்றன. நீ வரும்போது எனக்கு வோடோஃபோன் நாய்குட்டி வாங்கிட்டு வரியாப்பா... என்று மகள் அன்புக் கட்டளை போட. சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக்கொண்டு நாய் வங்க புறப்படுகிறார். அந்த நாய் குட்டியின் விலை 20,000 என்று அறிந்து கதிகலங்கி நிற்க, மகளின் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று துடிக்கிறார். 

கேரளாவில் இருக்கும் நண்பர் மூலமாக அங்கே இருக்கு கலைக்கூடம் வைத்திருக்கும் வெளிநாட்டவர்களின் அறிமுகம் கிடைக்கிறது. ஒரு புகைப்படத்தைக் காட்டி, இது ஒரு பழங்கால இசை கருவி, இது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடடாது, இதை கொண்டுவந்தால் 20,000 பணம் தருகிறோம் என்று சொல்கிறார்கள்.


பல சிரமங்களுக்கு உட்பட்டு பல மையில்களுக்கு அப்பால் இருக்கும் காடுகள் தாண்டி, மலைகள் தாண்டி இருக்கும் அந்த மலைக்கிராமத்தை கண்டுபிடிக்கிறார். தன் வீட்டிற்கு மகள் கேட்ட நாயோடு வரும்போது வீட்டில் மகள் இல்லை... தன் மகளை எங்கே கண்டுபிடித்தார் என்பது கண்களை ஈரமாக்கும் க்ளைமாக்ஸ்.  
  
காட்சிகள் மட்டுமல்ல ஒவ்வொரு ஃப்ரேமும் கதை சொல்கிறது. தைரியமான இயக்குனர் மட்டுமல்லாமல் துணிச்சலான நடிகர் என்பதையும் நிரூபித்துவிட்டார் ராம். இந்த சமூகம் நீ ஒரு கையாலாகாதவன் என்று குற்றம் சொல்லும் போதும், கோபமாக வசனம் பேசும் காட்சிகளிலும் ராம் நடிப்பில் நின்றுவிட்டார். (ராமை நடிக்க சொன்ன தயாரிப்பாளர் கௌதம் மேனனுக்கு நன்றி). தன் மகளின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் நேரம் நான் நல்ல அப்பா இல்லை என்று கன்னத்தில் அடித்துக் கொண்டு அழும் இடத்தில் சபாஷ் வாங்குகிறார் ராம்.

தவழும் தென்றலாய்... உலவும் நிலவாய்... பூமழையாய்... பனித்துளியாய்... கவிதையைபோல காட்சியளிக்கிறார் மகள் சாதனா. அப்பா மகளாகவே வாழ்ந்திருக்கிறார்கள் இருவரும். இந்த உலகத்தில் யாரைவிடவும் அப்பாவின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கும் மகளாய், மகளின் நம்பிக்கையை சிதைத்துவிடக் கூடாது என நினைக்கும் அப்பாவாய் பாசத்திலும் நடிப்பிலும் ராம் மற்றும் சாதனா போட்டிபோடுகிறார்கள்.


மலைகள் சூழ்ந்த பகுதியில் அழகிய நீரோடையாக படத்தில் காட்சியளிக்கும் பத்மபிரியா(எவிட்டா மிஸ்) குறைவான நேரம் வந்தாலும் ஆழமான நடிப்பு. 

தனியார் பள்ளியில் தேர்வு நடக்கும் போது பின்னால் அதே பள்ளியின் கட்டிட பணிகள் நடப்பது, கண்டித்து கன்னத்தில் அறையும் தந்தை மகன் இல்லாத நேரத்தில் கண்ணீர் விடுவது, எவிட்டா டீச்சரைத் தேடிப்போகும் போது ஒலிக்கும் கிறிஸ்துவப்பாடல், தன் மகளிடம் கிறிஸ்துமஸ் தாத்தா போல பேசி மகிழ்வது, தன் தங்கையின் சாக்லேட் வாங்கி செல்வது என தங்க மீன்களின் கவிதையில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கி இருக்கிறது.  

காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு தாங்க என ஆசிரியர் ராமிடம் சொன்னதும் ’காக்கா வந்து உங்க கிட்ட சொல்லுச்சா மிஸ்... காக்கா வந்து உங்க கிட்ட வந்து சொல்லுச்சா?’ என ராம் கேட்பதும்,  ராமின் தங்கை அவரிடம் ’20000 ரூபாய்க்கு நாய் வாங்கி தேவையில்லாம செலவு பண்ணனுமா?’ என்றதும் ’அவ்வளவு செலவாகும்னு தெரிஞ்சா கேட்டிருக்கமாட்டா... டி.வி-ல விளம்பரம் போடும்போது அந்த நாயோட விலை சொல்லியா போட்றாங்க?’ என்ற சில வசனங்களில் மனசு விசிலடித்து கைதட்டியது.


காடு தாண்டி... மலை தாண்டி... இசைக்கருவியை கண்டுபிடிக்கும் காட்சிகள் அம்புலி மாமா கதை சொல்லி ஏமாற்றுவது போல் இருக்கிறது என்பது மட்டுமே படத்தின் ஒரே குறை. நிறைகள் நிறைய இருப்பதால், குறையை தள்ளிவைப்பதில் தயக்கம் வேண்டாம். ராமின் மனைவியாக வரும் ஷெல்லி கிஷோர், ராமின் அம்மாவாக வரும் ’சிரிக்காத ஆச்சி’ ரோகினி, ராமின் அப்பாவாக வரும் ’பூ’ ராம் என திரைப்படத்தின் மற்ற கதாபாத்திரங்களும் மனதில் பதிகிறது. 

இத்திரைப்படத்தின் இராட்சத பலமாய் திகழ்வது யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. யுவன் கி-போர்டில் கவிதை வாசிக்கிறார் என்றால், ஒளிப்பதிவாளர் அர்பிந்துசாரா கேமராவில் கவிதை வாசிக்கிறார். ‘ஆனந்த யாழை...’ பாடல் கேட்பவர்களையும் பார்ப்பவர்களையும் ஆனந்த மழையில் நனைக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. 

தங்க மீன்கள் - கண்களை குளமாக்கும் அழியாத கவிதை!

'அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன்’..... - ஹைதராபாத்திலிருந்து அஞ்சலி கடிதம்!

டிகை அஞ்சலி திடீரென மாயமாகி திரையுலகில் அவ்வப்போது பரபரப்பை கிளப்பிவிடுகிறார். முன்பு மாயமான போது சித்தியால் பல தொந்தரவுகளுக்கு ஆளானேன் என ஒரு பெரிய பூகம்பத்துடன் திரும்பி வந்தார்.


சமீப காலமாக திரையுலகில் எங்கும் காணப்படாமல், அஞ்சலி, விஷால் நடிப்பில் வெளியாகவிருக்கும் மதகஜராஜா திரைப்படத்தின் புரமோஷனுக்கும் கூட தலைகாட்டாமல் ஹைதராபாத்திலே இருந்துவந்தார்.

இந்த சமயத்தில் தான் அஞ்சலிக்கும் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணமாகிவிட்டது என்ற தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம், ஆந்திரா, கேரள என பல மாநிலங்களிலும் இந்த செய்தி தீயாய் பரவ, தற்போது ஹைதராபாத்திலிருந்து ஊடகங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார் அஞ்சலி.


அந்த கடிதத்தில் ” அன்புடையீர் வணக்கம்... கற்றது தமிழ் படம் துவங்கி இன்று வரை பல்வேறு காலகட்டங்களில் என்னை ஆதரித்து ஊக்கமளித்த அனைத்து ஊடகங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி... சமீபத்தில் நான் சுந்தர்.C இயக்கத்தில் விஷாலுடன் நடித்த மதகஜராஜா படத்திற்கு டப்பிங் பேச மறுப்பதாகவும், படம் சம்மந்தமான விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர மறுப்பதாகவும் செய்திகளும், அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் இணைத்தும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அது முற்றிலும் தவறான தகவல் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இனி வரும் காலங்களில் என்னைப் பற்றிய செய்திகளுக்கு விளக்கம் தேவைப்படும் எனில் என்னுடைய newsfromanjali@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி! வணக்கம்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


அஞ்சலி அனுப்பிய கடிதம் ரசிகர்களின் பார்வைக்கு : 


அஜித் - ஹரி இணையும் ’அடங்காதவன்’!



சிங்கம் 2 திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஹரி எந்த ஹீரோவை வைத்து எந்த மாதிரியான திரைப்படம் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகமாகவே காணப்பட்டது.


அதேபோல் ‘ஆரம்பம், ‘வீரம்’ என அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் இரு படங்களைப் பற்றியும் தெரிந்துவிட்டதால், அஜித்தின் அடுத்த படம் பற்றியும் ரசிகர்கள் எதிர்பார்க்க துவங்கிவிட்டனர். இந்நிலையில் ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அஜித்-ஹரி கூட்டணியில் ‘அடங்காதவன்’ திரைப்படத்தை தயாரிப்பதாக ஒரு போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த போஸ்டர் உண்மையானதாக இருந்தால் அஜித்தும், ஹரியும் இணையும் முதல் திரைப்படம் அடங்காதவன். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக கூறப்படும் இத்திரைப்படத்தின் ஹீரோயின் யார் என்பது தெரியவில்லை. விஷ்ணுவர்தன் திரைப்படத்தில் செய்தது போல் இல்லாமல் டைட்டிலை முதலில் தெரிந்து கொண்டுவிட்டதால் ரசிகர்கள் திருப்தியில் இருக்கின்றனர்.

மேலும் அடங்காதவன் என்ற டைட்டில் அஜித்தின் உண்மையான குணாதசியங்களில் ஒன்று என்று சுட்டிக் காட்டுவதோடு, அஜித்தின் கெட்-அப்பை பார்த்து மிரண்டுபோயிருக்கிறார்கள் ரசிகர்கள்.

”என் ரசிகர்கள் சோதனைகளை சாதனையாக்க வேண்டும்” - ஜாமீனில் வெளிவந்த பவர்ஸ்டார் பேட்டி!

லத்திகா திரைப்படத்தின் மூலம் உலகம் முழுக்க பிரபலமானதாக்(!) கூறப்படும் பவர்ஸ்டார் சீனிவாசன் கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் மூலம் உண்மையிலேயே பல ரசிகர்களை கவர்ந்தார்.


வருங்கால முதல்வர், இந்திய ஜனாதிபதி என்பதையெல்லாம் தாண்டி எதிர்கால அமெரிக்க ஜனாதிபதி என்று ரசிகர்களால்(!) பாராட்டப்பட்ட பவர்ஸ்டார் சீனிவாசன் சில மாதங்களாக பண மோசடி வழக்கில் சிறையில் தள்ளப்பட்டார்.பவர்ஸ்டார் சிறையில் இருந்தபோது அவர் நடித்த ஆர்யா சூர்யா திரைப்படத்தின் நிகழ்ச்சிகள் நடந்துவிட்டதால், இத்திரைப்படத்தைப் பற்றி அவரால் ரசிகர்களுக்கு எதுவும் கூற முடியவில்லை.

ரசிகர்கள், உறவினர்களை சந்திக்க இரண்டு நாள் ஜாமீனில் வெளிவந்த பவர்ஸ்டார் அளித்த பேட்டியில் “ரொம்ப பில்டப் குடுத்து தான் நான் இந்த நிலைமைக்கு வந்து நிக்குறேன். ஆர்யா சூர்யா திரைப்படத்தில் நான் ஹீரோ கேரக்டரில் நடித்திருக்கிறேன். என் மீதுள்ள நம்பிக்கையில் என்னை வைத்து இரண்டு படங்கள் எடுத்திருக்கும், என்னுடைய காட்ஃபாதர் ராமநாராயணன் சாருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.


ராமநாராயணன் சார் வழக்கமாக அனிமல்ஸை வைத்து படமெடுப்பார். ஆனால் அவரது 126-வது திரைப்படத்தில் என்னையும், விஷ்ணு ப்ரியனையும் வைத்து எடுத்திருக்கிறார். என் ஆனந்தத் தொல்லை திரைப்படம் கோச்சடையானுடன் தீபாவளியன்று எதிர்பார்க்கலாம்” என்று கூறினார்.

மேலும் டெல்லி ஜெயிலில் இருந்த அனுபவம் பற்றி கேட்டபோது “நான் ஜெயிலில் இருந்த போது கிட்டத்தட்ட 1500 ரசிகர்கள் வந்து என்னை பார்த்துவிட்டுச் சென்றனர். ஒரு நடிகனாக சென்றதால் ஜெயிலில் எனக்கு நல்ல மரியாதை கிடைத்தது. சினிமா தொடர்பு இல்லாமல் நான் சாதாரணமாக சென்றிருந்தால், வேறு மாதிரி கவனித்திருப்பார்கள். எனவே நான் சினிமாவை நிறைய நேசிக்கிறேன்” என்றார்.


கடைசியாக உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் என்ன மெஸேஜ் சொல்ல நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு “இன்பத்தை மட்டுமே அனுபவிப்பது வாழ்க்கை இல்லை. துன்பங்களையும் சரிபாதியாக அனுபவிக்க வேண்டும்.  சோதனைகளையும் சாதனையாக்கி வெற்றிபெற வேண்டும். திரைப்படங்களுக்கு வரும் பிரச்சனைகளால் தயாரிப்பாளர்களுக்குத் தான் பாதிப்பு அதிகம். அவர்களுக்கு என் அனுதாப வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிலளித்தார்.

ஆர்யா சூர்யா படத்தில் ‘வட போச்சே’ என்ற பாடலை பாடியிருக்கிறார் பவர்ஸ்டார். மேலும் ‘சூப்பர்ஸ்டார் யாரு... இந்த பவர்ஸ்டார பாரு...’ என்ற பாடலுக்கு அதிரடியாக நடனமாடியிருக்கிறாராம்.


என் மனைவியை மட்டுமே காதலிக்கிறேன்! வதந்திகளை நம்பவேண்டாம் - சிவகார்த்திகேயன் விளக்கம்

குறுகிய காலத்திலேயே உச்சத்தைத் தொட்ட நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். மெரினாவில் தன் சினிமா பயணத்தைத் தொடங்கி, எதிர்நீச்சல் போட்டு இப்பொது மான்கராத்தேவில் ஹன்சிகாவோடு டூயட் பாடி வருகிறார். 

சிவகார்த்திகேயனுக்கும், நடிகை பிந்து மாதவிக்கும் இடையே காதல் மலர்ந்துவிட்டதாக ஒரு தகவல் கோடம்பாக்கத்தில் பரவலாக பேசப்பட, இதனால் சிவகார்த்திகேயனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் பிரச்சனை என்றும் பரபரப்பு கிளம்பியது. தன் மனிவியை பிரிய சிவகார்த்திகேயன் விவாகரத்து வரை சென்றுவிடட்தாக செய்திகள் வந்தன.


இதனை பற்றி பேசுவதற்காக சிவகார்த்திகேயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, “அந்த மாதிரி செய்திகள் வருவது வருத்தமளிக்கிறது. அந்த நடிகை  நான் நடித்த படத்தில் ஒரு ஹீரோயினாக நடித்தார். அவ்வளவுதான். இதை வைத்துகொண்டு தவறான வதந்திகளை சிலர் பரப்பி விட்டுவிட்டனர்.

மேலும் என் மனைவியுடன் எனக்கு எந்தவித சண்டையோ, பிரச்சினையோ கிடையாது. நங்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். இன்று (27.08.2013) எங்கள் வாழ்வில் மிகவும் முக்கியமான நாள். எங்கள் திருமண நாள். இந்த நாளில் இந்த விஷயத்தை தெளிவுபடுத்துவதை சந்தோஷமாக கருதுகிறேன். எனவே இது மாதிரி செய்திகள் வந்தால் யாரும் நம்ப வேண்டாம். நான் என் மனைவியை மட்டுமே காதலிக்கிறேன்.

தற்போது சிவகார்த்திகேயன் சென்னையில் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார் என்பதும், இன்று அவர்களின் மூன்றாம் வருட திருமண நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

சிவகார்த்திகேயன் - பிந்து மாதவி காதல்! விவாகரத்து கேட்கிறாரா சிவகார்த்திகேயன்?

ருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திற்காக தற்போது மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் புரமோஷனல் டூர் மேற்கொண்டுவருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். கலகலப்பான நடிகராக த்மிழ்த் திரையுலக ரசிகர்கள் பலரின் மனதிலும் இடம்பிடித்துவிட்ட சிவகார்த்திகேயன், ஒரு பெண்ணின் மனதிற்கு நிரந்தர சொந்தக்காரன் என்பது பலருக்கு தெரியாது.


தனக்கு திருமணமான விஷயத்தைப் பற்றி பொதுவாகவே எந்த நிகழ்ச்சியிலும் பேசியதில்லை என்பதோடு, தெரிந்தவர்கள் கேட்டால் இது போல் வெளியே வருவது என் மனைவிக்கு பிடிக்காது என்று அடக்கமாக சொல்லிவிடுவாராம் சிவகார்த்திகேயன். எப்போதும் சரவெடி மாதிரி கலகலப்பாக பேசும் சிவகார்த்திகேயனுக்குத்தான் விவாகரத்து வரை செல்லும் அளவிற்கு பிரச்சனை ஏற்பட்டுவிட்டதாக பேசப்படுகிறது.

’பகலில் பக்கம் பார்த்து பேசு. இரவில் அதுவும் பேசாதே’ என்ற பழமொழிக்கு எதிராக சிவகார்த்திகேயன் வீட்டில் இரவெல்லாம் ஒரே கூச்சலும் சண்டையுமாய் இருந்திருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கும், நடிகை பிந்து மாதவிக்கும் இடையே காதல் மலர்ந்துவிட்டதாக ஒரு தகவல் கோடம்பாக்கத்தில் பரவ, இந்த செய்தி வளசரவாக்கத்தில் இருக்கும் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்திக்கும் தெரிந்துவிட்டதாம்.


பிந்து மாதவியுடனான காதல் குறித்து தினமும் சிவகார்த்திகேயன் வீட்டில் சண்டை நடந்து அந்த ஏரியாவையே அமர்க்களப்படுத்தியதால், சிவகார்த்திகேயனுக்கு நெருக்கமானவர்கள் பிரச்சனை குறித்து விசாரித்திருக்கின்றனர். அப்போது ஒருவரிடம் சிவகார்த்திகேயன் விவாகரத்து குறித்து ஆலோசித்ததாக கோடம்பாக்கமே பரபரக்கிறது.

சிவகார்த்திகேயனும், பிந்து மாதவியும் ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் பிந்து மாதவி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதற்கு சிவகார்த்திகேயனின் முயற்சி தான் காரணம் என்று பரவிய தகவலால் தான் பிரச்சனை என்றும் பேசப்படுகிறது.


தனக்கு வரும் ஃபோன் கால்களை சிவகார்த்திகேயன் எடுக்காததற்கு காரணம் இது குறித்து பேச விருப்பமில்லாமலா? அல்லது இன்று சிவகார்த்திகேயனின் திருமண நாள் என்பதாலா? என்று கோடம்பாக்கத்திலேயே குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

It's a message for my Daughter - Director Ram about THANGA MEENGAL

It's a message for my Daughter - Director Ram about THANGA MEENGAL

Raja Rani Movie Audio Launch

Raja Rani (English: King, Queen) is an upcoming Tamil romantic comedy film directed by debutante Atlee Kumar

Simbu’s Vettai Mannan Second Half Shooting Details

Simbu’s Vettai Mannan Second Half Shooting Details

தலைவா - விமர்சனம்!

ல தடைகளைத் தாண்டி வெளிவந்திருக்கிறது விஜய் நடிப்பில் விஜய் இயக்கிய தலைவா. தலைவனாகிறதுன்னா சும்மாவா? தலைவா தாமதமாக வெளிவந்த பிரச்சனையில் பல சந்தேகங்களும் கருத்துகளும் இருக்கும். அதேல்லாம் நமக்கெதுக்கு? படம் எப்படி இருக்கிறது என்பதை மட்டும் பார்ப்போம்.

‘படத்தின் கதை இதுதான்’ என்பது இணையதளங்களில் வேகமாக பரவியதால், அனைவரும் அறிந்த அதே கதை தான். மும்பையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் கலவரத்தை ஏற்படுத்தி தன் பலத்தை நிரூபிக்க முயற்சி செய்கிறது வில்லன் கும்பல். அந்த வில்லன் கும்பலின் தலைவனை தீர்த்துக் கட்டி, அந்த இடத்திற்கு அண்ணா-வாக வருகிறார் சத்யராஜ். சத்யராஜை அனைவரும் அண்ணா என்று தான் அழைக்கிறார்கள். 


தன் மகனுக்கு இதெல்லாம் தெரியக்கூடாது என்று சொல்லி சிறுவயதிலேயே அவரை ஆஸ்திரேலியா அனுப்பிவிடுகிறார். ஆஸ்திரேலியாவில் வளர்ந்த விஜய் நண்பன் சந்தானத்துடன் பிசினஸ் செய்துவருகிறார். விஜய் நடத்தும் டான்ஸ் டீமில் அமலா பால் சேர, இருவருக்கும் காதல் மலர்கிறது. அமலா பாலின் தந்தை சுரேஷ், விஜய்யின் குடும்பத்தை பற்றி தெரிந்துகொள்ள நினைக்கிறார். அவர்களை அழைத்துக்கொண்டு தன் தந்தைக்கு சர்ப்ரைஸ் கொடுக்க மும்பை வருகிறார் விஜய். 

மும்பை வந்த பிறகு தான் சத்யராஜ் என்ன வேலை செய்கிறார் என்பதும், அவர் தலைமறைவாக இருப்பதும் தெரியவருகிறது விஜய்க்கு. விஜய்யை சந்திக்க சத்யராஜ் வெளியே வர அவரை சுற்றி வளைக்கிறது போலிஸ். அமலா பாலும் அவர் தந்தை சுரேஷும் சி.பி.சி.ஐ.டி ஆபீசர்கள் என்பதும் அம்பலமாகிறது. சத்யராஜ் கைதுசெய்யப்பட்ட போலிஸ் வண்டி வில்லனின் சதி வேலையால் வெடித்து சிதற, அப்பகுதியில் மீண்டும் வில்லன்களின் அராஜகம் தொடங்குகிறது. 


சத்யராஜின் இடத்திற்கு இன்னொரு தலைவனாக யார் வருவார் என்ற கேள்வி எழும் நேரத்தில், நான் இருக்கிறேன் என்று சொல்லி வாலிண்டியராக  வாயைக் கொடுக்கிறார் விஜய். விஜய்க்குப் பின்னால் மக்கள் சக்தி இருப்பதை புரிந்து கொண்ட போலிஸ், எதுவும் செய்யமுடியாமல் தவிக்கிறது. தொடர்ந்து வரும் வில்லன்களின் அட்டகாசங்களை எதிர்க்கும் விஜய், கூட இருந்துகொண்டே குழிப்பறிக்கும் சில கருப்பு ஆடுகளையும் தாண்டி தலைவனாக தன்னை எப்படி நிலைநாட்டுகிறார் என்பது தான் முடிவு. 

ஒரு மாஸ் ஹீரோவுக்கு ஏற்றக் கதைதான். மிகவும் சுலபமான ஒரு கதைக்களத்தை எடுத்த இயக்குனர் விஜய் அதை மிகவும் சிக்கலான முறையில் கையாண்டிருக்கிறார். படத்தின் திரைக்கதை ஜவ்வு மாதிரி இழுப்பது மிகப் பெரிய மைனஸ். படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் அது கொஞ்சம் ஆறுதலாக அமைந்திருக்கும். முதல் பாதில் வரும் ரொமாண்டிக் காட்சிகளையும் இரண்டாவது பாதியில் வரும் விஜய்க்கான பில்டப் காட்சிகளையும் கத்தரித்து கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம். திருடப்பட்ட கேசட்டை திருடனிடமிருந்து மீட்க விஜய்யும் வில்லனும் போட்டிப்போடும் காட்சியில் திரைக்கதை சரவெடியாய் பறக்கிறது. அந்த வேகம் படம் முழுக்க இல்லை என்பது தான் சோகம்.  


படத்தின் மிகப் பெரிய ஆறுதல் சந்தானம் மட்டுமே! அமலா பாலை காதலிக்கும் கலாட்டாக்களில் தொடங்கி, மும்பை வந்து பாங்கு திங்கிற வரைக்கும் சிரி சிரின்னு சிரிக்க வைக்கிறார். ‘இது ஒருவழிப்பாதை திரும்பிப்போக முடியாது’ என்று சத்யராஜ் விஜய்யிடம் சொல்வது அர்த்தமானதாக இருந்தது. அதையே சந்தானத்திடம் விஜய் ரிபீட் அடித்தது கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. அதையே சந்தானம் தன் நண்பனிடம் சொல்லி அப்ளாசை அள்ளிக்கொண்டு போய்விட்டார்.

சாம் ஆன்ட்ரசன் வரும் ஒரு காட்சி தியேட்டரையே குலுங்க வைக்கிறது. ஆஸ்திரேலியாவுல ஷூட்டிங் இருந்ததால வர முடிச்சது, தமிழ்நாட்டுல இருந்தா ரொம்ப கஷ்டம் என்று விஜய்யிடம் அவர் சொல்வது மேலும் கிச்சு கிச்சு மூட்டியது. 

மகாராஷ்ட்ர வெறியர்களிடம் ‘நீயும் நானும் ஒரு நாடு, இந்தியா! ரத்தத்தில் தமிழன், பீகாரி என்று எழுதியிருக்கிறதா?’ என்றெல்லாம் வசனம் பேசி, அவர்களை ஒரு நிமிடத்தில் திருத்திவிடுவது மணிரத்னம் காலம் தொட்டே நடப்பதுதான். அதில் பெரிய ஆச்சரியமில்லை.

கலர்ஃபுல் காஸ்டியூம்களோ, டண்டனக்கா டான்சுகளோ இல்லாதது விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம். அந்தக் குறையை பாங்கு சாங்கில் ஒரளவு சரிகட்டி இருக்கிறார் விஜய். அமலா பால் காலில் அடிபட்டு, ஆடமுடியாத நிலையில் இருக்க, அவரை தூக்கி வைத்து ஒரு ரொமாண்டிக் டான்ஸ் போடுவது விஜய்க்கே உரிய ஸ்டைல். சண்டைக்காட்சிகளில் ஓரளவிற்கு நம்பும்படியாக நியாயத்தைக் கடைபிடித்திருக்கிறார்கள். 

வித்யாசமான கதாபாத்திரத்தில் சத்யராஜ், நிதானமாகவும் நிறைவாகவும் நடித்திருக்கிறார். அமலா பாலுக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லை என்றாலும், தன்னால் முடிந்தவரை அதை சரிசெய்ய முயன்றிருக்கிறார். பொண்வண்ணன் மனதில் நிற்கிற நடிப்பு. 

தொழில்நுட்ப ரீதியாக ‘தி பெஸ்ட்’ என்பதில் சந்தேகமில்லை. நீரவ் ஷா கேமராவில் அசத்தியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் பல இடங்களில் பல இசையை ஞாபகப்படுத்துகிறார். ’தளபதி... தளபதி...’ பாடல் விஜய் ரசிகர்களுக்கு கிடைத்த விருந்து. 
அரசல் புரசலாக சொல்லப்பட்ட வசனங்கள் எதுவும் படத்தில் இல்லை. விஜய் தண்ணி கேன் சப்ளைப் பண்ணும் பிசினஸ் செய்வதால், அவரைப் பார்த்து சுரேஷ் இப்படி சொல்கிறார் ’தமிழ்நாட்டுக்கே தண்ணிகொண்டு வர முடியல, நீங்க ஆஸ்திரேலியாவுக்கே கொண்டு வந்துட்டீங்களே’.  

தலைவா - வெடிகுண்டு எதற்கு? படமே போதும்! ரசிகர்கள் ஜாக்கிரதை...

மதுரையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விஜய் ரசிகர்கள் போராட்டம்

நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளால் தமிழகத்தில் திரைக்கு வராமல் இருக்கிறது. மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் திரைக்கு வந்துள்ள இப்படம் தமிழகத்தில் ரிலீசாகா ததால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் சுமார் 200 பேர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைவா திரைப்படத்தை வெளியிட பாதுகாப்பு அளிக்கக் கோரி மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அங்கே வந்த வருவாய் கோட்டாட்சியர் எஸ்.ஆறுமுகம் விஜய் ரசிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களின் கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்டு, ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என்று உறுதி கூறினார். இதன் பின்னர் ரசிகர்கள் கலைந்து சென்றனர்.

தலைவா திரைப்படத்திற்கு அரசு கேளிக்கை வரிவிலக்கு அளிக்காதது ஏன்?

விஜய் நடித்துள்ள ‘தலைவா’ திரைப்படம் திட்டமிட்டபடி தமிழகத்தில் இன்று வெளியாகும் என எதிர்பார்க் கப்பட்டது. ஆனால், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் தயங்கினர். இதனால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந் தனர். 

இதற்கிடையே, ‘தலைவா’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் அளித்ததையடுத்து, கேளிக்கை வரி யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக வரிவிலக்கு குழு வினருக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டது. 

கேளிக்கை வரிச்சலுகை பெற வேண்டுமானால் தமிழில் பெயர் வைத்திருக்க வேண்டும். இதுதவிர வேறு சில கூடுதல் தகுதி வரையறைகளும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், ‘தலைவா’ திரைப்படத்தை பார்வையிட்ட தேர்வுக்குழு உறுப்பினர்கள், இத்திரைப்படம் வரிவிலக்கு அளிப்பதற்கு தகுதியானது அல்ல என்று பரிந்துரை செய்துள்ளனர். படத்தைப் பார்த்த  குழு உறுப்பினர்கள் படத்தில் உள்ள சில காட்சிகளுக்கும், விஜய் பேசும் சில வசனங்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்தனர். 
யு சான்றிதழ் பெற்றிருந்தாலும், திரைப்படத்தில் ஆங்கில மொழி கலப்பு அதிக அளவில் உள்ளதாலும், பெண்கள், குழந்தைகள் மனதைப் பாதிக்கும் வண்ணம் படத்தில் வன்முறை அதிகம் உள்ளதாலும் வரிவிலக்கு பெறுவதற்கு தகுதியற்றது என்று உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்த அரசு, தமிழ்நாடு கேளிக்கை வரிச்சட்டத்தின்படி ‘தலைவா’ திரைப்படத் திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க இயலாது என ஆணையிட்டுள்ளது.

"தலைவா" விமர்சனம்




தலைவா ..

கால் கிலோ பாட்ஷா, கால் கிலோ நாயகன், கால் கிலோ தேவர்மகன், கால் கிலோ சொந்த சரக்கு என கலந்து கட்டி கொடுத்து இருக்கிறார் இயக்குனர் விஜய்.. ஆனால் தன்னுடைய அசாத்திய ஆட்டம், பாட்டம், அதிரடியால் ஒரு அற்ப்புத படமாகவே கொடுத்துள்ளார் இளைய தளபதி விஜய்...

மருந்துக்கு கூட, ஏன் ஒரு காட்சியில் கூட தமிழ் நாடு காட்டப்படவே இல்ல, பிறகு ஏன் இங்க தடை.. விஸ்வா பாய் என்று விஜயை அழைப்பதை தவிர மத ரீதியான எந்த அடையாளமும் இல்லை. குறிப்பிட்டு சொல்லும்படியான எந்த அரசியல் தாக்குதலும் இல்லை... ஏன் தடைன்னு ஒன்னும் புரியல ..

ஆனா ஒன்னு தடையே இந்த படத்த இன்னும் ஓடவைக்கும் போல..

சரி கதைக்கு வருவோம்..

மும்பை தாராவி பகுதி "அண்ணா" சத்யராஜ். மும்பை தாராவியில் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்பவராக சத்யராஜ். அதனால் பிரபல தாதாவால் சுட்டுக்கொல்ல முயல்கையில் அவரின் மனைவி ரேகா துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு இறந்து போகிறார். ரௌத்ரமான சத்தியராஜ் அந்த தாதாவை போட்டுத் தள்ளிவிட்டு தான் தாதாவாக மாறுகிறார்.தம் மகனான ஐந்து வயது விஸ்வா(விஜய்)வுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று அவரை நாசரிடம் கொடுத்து,தான் யார் என்பதே தெரியக்கூடாது என்று சொல்லி ஆஸ்த்ரேலியா அனுப்பி விடுகிறார்.

பிறகு அண்ணா'வான சத்யராஜ் தாராவி மக்களுக்கு தலைவனாக தொண்டு செய்கிறார். தலை மறைவு வாழ்க்கையும் நடத்துகிறார்.

அங்கு ஆஸ்திரேலியாவில் விஜய் குடி தண்ணீர் வியாபாரம் செய்கிறார். நடனக்குழு ஒன்றையும் நடத்துகிறார். அங்கு அமலாபாலையும் அவர் தந்தை சுரேசையும் சந்திக்கிறார். விஜயுக்கும் அமலாபாலுக்கும் காதல் உண்டாகி திருமணம் வரை செல்கிறது. திருமணத்திற்கு விஜயின் அப்பாவை சந்தித்தே ஆகவேண்டும் என சுரேஷ் சொல்ல,சொல்லாமல் கொள்ளாமல் எல்லோரும் மும்பை வருகின்றனர். அங்கே கல்யாண விசயமாக பேசவரும் சத்யராஜை நோக்கி அமலாபாலும் சுரேஷும் துப்பாக்கியை காட்டி கைது செய்கிறார்கள். இருவரும் சிபிஐ அதிகாரிகள் என படம் விரிகிறது.

கைது செய்து கொண்டு செல்லும் வழியில் குண்டுவைத்து கொல்லப்படுகிறார் சத்யாஜ். அவரைக் கொன்றது யார் எனக் கேள்வி வர... முன்பு சத்யராஜ் ஒரு தாதாவை கொன்றார் அல்லவா...அவரோட மகன்தான். பின்னர் அப்பா விட்டுவிட்டுப் போன அந்த மக்கள் காவலன் பணியை மகன் விஜய் தொடர்ந்து செய்ய, தலைவன் ஆகிறார். கடைசியில் அப்பாவைக் கொன்ற அந்த வில்லனை கொல்கிறார்.

முதல் பாதி படம் தான் படத்தை தூக்கி நிறுத்தியது எனலாம்.காரணம் இடைவேளைக்கு பின்பு வரும் காட்சிகள் எவ்வளவு முயன்றாலும் பழைய படங்களை ஞாபகத்துக்கு கொண்டு வந்து விடுகின்றன.

விஜய் விஜய் தான் என்று எல்லோருமே ஒத்துக்கொள்ளும் விதமாக என்ன ஒரு துள்ளல் நடனம், ஆக்சன் .. வசூல் சக்கரவர்த்தி நீங்கள் தான் என இந்த படத்திலும் நிருபித்து விட்டீர்கள் விஜய், சாரி தலைவா.. இந்திய ஹீரோக்களில் நடனத்தில் தான் தான் சிறந்தவர் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறார் விஜய். முதல் பாதியில் நடனம் விசில் பறக்கிறது. தமிழ் பசங்க பாடலில் அது ஓவராக தூள் பறக்கிறது.

மைனா அமலாபாலா இது என்று கேட்கின்ற மாதிரி அழகை மாற்றி மெருகேற்றி வந்திருக்கிறார். நடிப்பிலும் நல்ல முன்னேற்றம்.

சந்தானம் சொல்லி கொள்ளும்படி ஒன்றும் இல்லை, வழக்கம் போல வேறுப்பெத்துகிறார். சாம் அண்டர்சன் இடையே வந்து கலகலப்பாக்கி செல்கிறார்.

. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா கண்ணுக்கு விருந்து படைத்திருக்கிறார். பாடல் காட்சிகளில் ஆஸ்திரேலிய அழகை கண்முன் நிறுத்திவிடுகிறார். அழகான பாடல்கள், அபாரமான நடனம் என்று இடைவேளை வரை படம் சில்லென நடை போடுகிறது.

பாடல்களில் "வாங்கண்ணா வணக்கங்கண்ணா' பாடல் ஏற்கனவே ஹிட் ஆகியிருந்தாலும், 'தலைவா'பாடலும், 'யார் இந்த சாலையோரம்', 'தமிழ் பசங்க' பாடல்களும் சொக்கும் ரகம். ஜி வி பிரகாஷ் கூட ஒரு பாடலில் வந்து நடனமாடி செல்கிறார்.

பழைய படங்களை நினைவுக்கு கொண்டு வரும் காட்சிகள், இயக்குனர் இந்த படத்தில் என்ன சொல்ல வருகிறார் என்பதில் தெளிவில்லாத குழப்பம் என படம் முழுக்க குறைகள் இருந்தாலும் விஜய்க்கு நிச்சயம் இது ஒரு வெற்றி படமே ... ஆனால் அவரின் முந்தைய படமான துப்பாக்கியை ஒப்பிட்டால் ... பொறுங்கள் பார்க்கலாம்,

தலைவா... விஜய் ரசிகர்களுக்கு மாஸ் படம்.. பொது மக்களுக்கு ரசிக்கும் படம் ..

ஜெயப்பிரகாசுடன் காதலா? லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம்


நடிகர் ஜெயப்பிரகாசுடன் தன்னை இணைந்து அவதூறு பரப்பப்பட்டு வருவதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பசங்க படத்தில் வாத்தியார் வேடத்தில் நடித்து பிரபலமான ஜெயப்பிரகாஷ், எதிர்நீச்சல், சென்னையில் ஒரு நாள், கழுகு, மங்காத்தா, மெரினா போன்ற படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகணம் படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

பல படங்களில் அம்மா, அண்ணி கதாபாத்திரத்தில் நடித்த லட்சுமி ராமகிருஷ்ணன், சென்னையில் ஒரு நாள் படத்தில் ஜெயப்பிரகாசுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இருவரையும் இணைத்து இணையதளத்தில் செய்திக்கு தனது டுவிட்டரில் பதிலளித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

ஜெய்பிரகாசுடன், இணைந்து வாழ்வதாக பரப்பப்பட்ட அவதூறு, எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

இந்த வயதில் காதல் எனக்கு தேவையா? எனக்கு கணவர் இருக்கிறார். காதல் அவர்மேல்தான் வரும். இந்த அவதூறை பரப்பியவர் யார் என்பது தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சூர்யா விலகினார்! சிம்புவிடம் கால்ஷீட் கேட்கும் கௌதம் மேனன்!


கௌதம் மேனன், தனது காக்க காக்க திரைப்படத்திலிருந்து அஜித்குமாருக்காக காத்துக்கொண்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் கௌதம் மேனன் - அஜித்குமார் இணையாமலேயே போய்விட, வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கு பிறகு “இனி அஜித்துக்காக நான் காத்திருக்க மாட்டேன். எனக்கு சூர்யா இருக்கிறார்” என கூறியிருந்தார்.

சமீபத்தில் சிங்கம் 2 திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றி கொடுத்த சூர்யாவிடம், அஜித்துக்காக வைத்திருந்த துப்பறியும் ஆனந்த் உட்பட மூன்று கதைகளை கூறினார்.

அவற்றில் துருவ நட்சத்திரம் கதையை தேர்ந்தெடுத்த சூர்யா, படுஜோராக படபூஜையிலெல்லாம் கலந்துகொண்டதோடு கதாபாத்திரத்திற்கு ஏற்ப உடலை மாற்ற ஜிம்முக்கெல்லாம் போனாராம். 

ஆனால் தற்போது துருவ நட்சத்திரம் கைவிடப்பட்டு, சூர்யா வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி கொடுத்துவிட்டதாக தெரிகிறது.

லிங்குசாமியின் மெகாபட்ஜட் திரைப்படத்தில் நடிக்கவே கௌதம் மேனன் திரைப்படத்தை ஒதுக்கிவிட்டார் சூர்யா என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. சூர்யா புராஜக்டை டிராப் செய்துவிட்டு கௌதம் மேனன் சிம்பு நடிப்பில் ஒரு படம் இயக்கவிருக்கிறார் என்று பேசப்படுகிறது.

விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் மூலம் சிம்புவை ஒரு சாக்லேட் பாய்-ஆக மாற்றியவர் கௌதம் மேனன். சிம்புவும், கௌதம் மேனனுடன் இணைய எப்பொழுதும் தயாராக இருப்பதோடு, சிம்பு

தற்போது நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படங்கள் கடைசிகட்ட படப்பிடிப்பில் இருப்பதால் இந்த கூட்டணி உறுதி என்கின்றது கோடம்பாக்கம். மேலும் சிம்புவுக்கு ஜோடியாக துருவநட்சத்திரம் திரைப்படத்தில் நடிக்கமாட்டேன் என உறுதியாக கூறிவிட்ட த்ரிஷாவை நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடக்கவிருக்கிறதாம்.

காக்க காக்க மாதிரி ஒரு திரைப்படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு விண்ணைத் தாண்டி வருவாயா மாதிரி ஒரு திரைப்படத்தை கௌதம் மேனன் கொடுக்கிறாரா என பொருத்திருந்து பார்ப்போம்.

மனிதர்களை வெறுக்கிறேன்; 35 பூனைகள், நாய், கோழிகளுடன் வாழ்கிறேன் : நடிகை கனகா உருக்கமான பேட்டி

பிரபல நடிகை கனகா புற்றுயோயால் அவதிப்படுவதாகவும் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச் சை பெற்றுவருவதாகவும் முதலில் செய்திகள் வந்தன.  இன்று அவர் சிகிச்சைபலனின்றி மரணம் அடைந்து விட்டதாக செய்திகள் வெளிவந்தன.  இந்நிலையுல் நடிகை கனகாவே தான் நலமுடன் இருப்பதாக செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அவர்,  ‘’நான் கேரளாவில் சிகிச்சை பெறவில்லை.  சென்னையில் உள்ள எனது வீட்டில் தான் இருக்கிறேன்.  எனக்கு புற்றுநோய் என்று செய்தி பரவி இருக்கிறது. நல்ல வேளை எய்ட்ஸ் என்று செய்தி பரவாமல் இருந்ததே; அதுவே போதும்.  

இந்த வதந்திகளை என் தந்தை எனக்கூறிக்கொண்டு திரியும் தேவதாஸ்தான் பரப்பி விடுகிறார்.  இதையே சாக்காக வைத்து என்னை சந்தித்து பேசி, மறுபடியும் என் சொத்துக்களை அபகரிக்கப்பார்க்கிறார்.

இல்லையென்றால் ஆலப்புழாவில் நான் சிகிச்சை பெற்று வருகிறேன் என்று செய்தி வெளியாகியுள்ள  நிலையில் என்னைத்தேடி சரியாக சென்னையில் நான் இருப்பதை எப்படி அவரால் அறிந்து கொள்ள  முடிகிறது.

என்னைத்தேடி ஆலப்புழாவுக்கு போகாமல் மிகச்சரியாக சென்னையில் உள்ள என் வீட்டிற்கு எப்படி வருகி றார்.  அவரை என் வீட்டிற்குள் வர நான் அனுமதிக்க மாட்டேன்.  என் அம்மாவுக்கு அவர் ஒருநாளும் அவர் நல்ல கணவராக நடந்துகொண்டதே இல்லை.

எனக்கு ஒரு நல்ல தந்தையாக எந்நாளும் நடந்துகொண்டதில்லை.  அவர் ஒரு பணப்பேய்.  அவரால் தான் எனக்கு ஆண்களைப் பார்த்தாலே பிடிக்காமலே போய்விட்டது.  அதனால்தான் திருமணம் வேண்டாம் என முடிவெடுத்து தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

எனது தனிமையை தவிர்ப்பதற்காக வீட்டில் 35 பூனைகளை வளர்க்கிறேன்.  நாய், கோழி இவற்றுடன் தான் வசிக்கிறேன்.  மனிதர்களை விட இவை எவ்வளவோ மேல். என் உதவிக்கு  என் தேவைகளை கவனித்துக் கொள்ள என் வேலைக்காரி மட்டுமே உடனிருக்கிறார்.

எக்காரணத்தைக்கொண்டும் எனக்கு தந்தை என்று கூறிவரும் தேவதாசை என் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன்.  என் அம்மாவுக்கு அவர் செய்த துரோகத்தை மன்னிக்கவே மாட்டேன்.

சில நடிகர், நடிகைகளிடம் நான் பேச முயற்சித்தேன். ஆனால் அவர்கள் என்னிடம் பேச விரும்பவில்லை.  

என் வீட்டு வாசலுக்கு வந்த தேவதாசை நான் துரத்திவிட்டேன்.  அவரை நான் பார்க்க விரும்பவில்லை.  என் இறுதி மூச்சு வரை இதில் நான் உறுதியாக இருப்பேன்.’’ என்று கூறியுள்ளார்.

நடிகை கனகா தவறிவிட்டதாக வதந்தி : கனகாவே நேரில் பரபரப்பு பேட்டி

பழம்பெரும் நடிகை தேவிகா கடந்த  2000ம் ஆண்டில் மறைந்தபிறகு  அவரது மகளும், பிரபல நடிகையுமான கனகா தனித்து விடப்பட்டார்.  படவாய்ப்புகளும் இல்லாத நிலையில் அவரைப்பற்றிய செய்தியே இல்லாமல் இருந்தது.  

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கேரள மாநிலம் ஆலப்புழாவில் அனாதைகளுக்கும் ஆதரவற்றோர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஆஸ்பத்திரியில் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார் என்று அதிர்ச்சி செய்தி வெளியானது.   இதையடுத்து இன்று அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டார் என்றும் செய்தி வெளியானது.

இந்த சூழ்நிலையில் நடிகை கனகாவே சென்னையில்  தனது வீட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர்,  ‘’எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை.  நான் நலமுடன் இருக்கிறேன்.  யாரோ சிலர் என்னைப்பற்றி வதந்தி பரப்புகிறார்கள். ஆலப்புழாவில் நான் சிகிச்சைப் பெற்று வருவதாக வந்த தகவல்களும் தவறு.   என்னைக்கேட்காமலே உடல்நிலை சரியில்லை என செய்தி வெளிவந்துள்ளது’’ என்று கூறியுள்ளார்.


செய்தியாளர்களை நேரில் சந்தித்ததன் மூலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கனகா.

துவங்கியது விஜய் பட பிரச்சனைகள்! தடைகளை தாண்டுமா ’தலைவா’?

விஜய் நடித்த துப்பாக்கி படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைகள் சொல்லித் தெரிய வேண்டியதல்ல. துப்பாக்கி திரைபப்டத்தில் எதிர்கொண்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி, தலைவா திரைப்படத்தை எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் நல்லபடியாக ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்பதில் எச்சரிக்கையுடன் இருந்தது தலைவா படக்குழு. 

சில அரசியல் காரணங்களால் விஜய் பிறந்தநாள் நிகழ்ச்சியையே நடத்தவிடாமல் செய்துவிட்டதால், தலைவா இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடக்காமல் மிகவும் சாதாரணமாக நடத்தப்பட்டது (ரோட்ல ஒரு பேனர் கூட வெக்கல). 

ஒரு பக்கம் தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் பத்திரிக்கைகளில் தலைவா திரைப்படத்தின் புரமோஷன் வெகு பரபரப்பாக நடைபெற, மறுபக்கம் சைலண்டாக தணிக்கைத் துறைக்கு தலைவா திரையிடப்பட்டிருக்கிறது. தலைவா திரைப்படத்தை பார்த்த தணிக்கை துறையினர் வன்முறையான சண்டைக் காட்சிகள் இருப்பதால் தடாலடியாக ’A' சர்டிஃபிகேட் கொடுத்துவிட்டார்களாம்.

அதன்பிறகு தணிக்கைக் குழுவின் சில நிபந்தனைகளுக்கு(சில காட்சிகளை வெட்ட) உட்படுவதாக தலைவா டீம் கூறியபிறகும் கூட 'UA' சான்றிதழ் தான் கொடுக்கமுடியும் என்று கறாராக சொல்லிவிட்டார்களாம்.

சர்டிஃபிகேட் வாங்கும் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு என்பதாலும், இவ்வளவு பெரிய மெகா பட்ஜெட் படத்திற்கு வரி விதித்தால் பல கோடிகள் பணம் வரியாக செலுத்தவேண்டும் என்பதாலும் தமிழக அரசின் ரிவிஷன் கமிட்டியிடம் முறையிட இருக்கிறதாம் தலைவா டீம்.

அங்கும் UA சர்டிஃபிகேட் கிடைத்தால் ஸ்ட்ரைட்டாக மும்பைக்கு சென்று U சர்டிஃபிகேட்டுக்கு முறையிடவிருக்கிறார்களாம். விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் என்பதால் வேந்தர் மூவீஸ் தலைவா திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை பெரிய விலைக்கு வாங்கியது. 

சமீப காலமாக விஜய்யின் செல்வாக்கை உடைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாக பேசப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் வேந்தர் மூவீஸின் உரிமையாளரான பாரிவேந்தர் பச்சைமுத்துவின் எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் மீது ரெய்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்டு 9-ஆம் தேதி தலைவா திரைப்படத்தை பார்க்க ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்களை மகிழ்விக்க தடைகளை தாண்டுமா தலைவா?

’எங்கடி பொறந்த’ - அனிருத் டூ ஆண்ட்ரியா!

அனிருத் - ஆண்ட்ரியா என்ற பெயர்கள் பரபரப்புக்கு பஞ்சமில்லாதவை. சில மாதங்களுக்கு முன்பு வெளியான அவர்களது படங்கள் அப்படிப்பட்டவை. அனிருத்தும், ஆண்ட்ரியாவும் லிப்-லாக் முத்தம் கொடுப்பது மாதிரி வெளியான அந்த ஃபோட்டோக்கள், அவர்களின் நட்பை உடைத்தெறிந்துவிட்டன.

அதோடு ஆண்ட்ரியாவைவிட வயது குறைவான அனிருத்துடன் லிப்-லாக்கா என கோடம்பாக்கமே பரிகாசித்தது ஆண்ட்ரியாவை. அதன்பிறகு அனிருத் மன்னிப்பெல்லாம் கேட்டு தூது விட்டிருந்தாலும், ஆண்ட்ரியா எதற்கும் செவி சாய்க்காமல் இருந்தார். இப்படி வேறு வேறு பாதையில் சென்று விட்ட இருவரும் தற்போது மீண்டும் இணையவிருக்கின்றனர்.

கிருத்திகா உதயநிதி இயக்குனராக அறிமுகமாகும் ‘வணக்கம் சென்னை’ திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைப்பாளர். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகராக 5 பாடல்களுக்கு அனிருத் குரல் கொடுக்கிறார்.

5 பாடல்களில் ஒரு பாடலான ‘எங்கடி பொறந்த’ என்ற பாடலுக்கு அனிருத்துடன்  ஆண்ட்ரியாவை பாட வைத்தது தான் இயக்குனர் வைத்த மிகப்பெரிய டுவிஸ்ட்(ஆஃப்-ஸ்கிரீனில்). இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஆண்ட்ரியா எவ்வித நிபந்தனையுமின்றி அனிருத்துடன் இணைந்து பாட ஒப்புக்கொண்டது தான். கிருத்திகா இயக்கும் இத்திரைபடத்தில் சிவாவுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார்.

சீமான் VS லிங்குசாமி! டைரக்டர்ஸ் டிஷ்யூம்!

கலைப்புலி தாணு தயாரிப்பில் சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘பகலவன்’ என இரண்டு வருஷத்துக்கு முன்பே செய்திகள் வந்தது.


‘ஸ்கிரிப்ட் பின் பாதியில் மாற்றம் செய்வதால் தாமதம். க்ளைமாக்ஸில் திருத்தம் நடக்குது’ என்றெல்லாம் தாமதத்திற்கு காரணம் சொல்லப்பட்டு வந்த நிலையில்... சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க மறுத்துவிட்டார். அதனால் கிடப்பில் போடப்பட்ட படத்திட்டம் சமீபத்தில் வேகம் எடுத்தது. ஜீவாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து, தற்போது ஜெயம் ரவி தான் அந்த படத்தில் நடிக்கவிருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

ஓகே... இந்த மேட்டரை இப்போதைக்கு மறந்திருங்க...

சிங்கம் 2 சூர்யாவின் கேரியரில் திருப்புமுனை படமாக அமைந்தேவிட்டது. காக்கிச்சட்டையில் அவர் காட்டிய விறைப்பு அப்படி. இருப்பினும் தொடர்ந்து உடனடியாக காக்கி யூனிஃபார்ம் போட்டு நடித்தால் கசந்து போகும் என்பதால் இப்போதைக்கு போலிஸ் ஸ்டோரி வேண்டாம் என்கிற மனநிலையில் இருக்கிறார் சூர்யா. 

ஓகே... இந்த மேட்டரை இப்போதைக்கு மறந்திருங்க...


கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு பூஜை போட்டு ரெண்டு மாசம் ஆச்சு. ’இன்னும் ஸ்க்ரிப்ட் ஒர்க் முடியாததுதான் தாமதம்’ எனச் சொல்லப்பட்டாலும், ‘ஷூட்டிங்கை இப்போதைக்கு ஆரம்பிக்க வேண்டாம்’ என கௌதமிடம் சூர்யா சொல்லி இருக்காராம். 

ஓகே... இந்த மேட்டரையும் இப்போதைக்கு மறந்திருங்க...

ஏற்கனவே தனது இரண்டு படங்களுக்கு சூர்யாவிடம் கால்ஷீட் கேட்டிருந்தார் லிங்குசாமி. ஆனால் சூர்யாவால் தரமுடியவில்லை. இப்போது லிங்கு சொன்ன ஒரு கதை சூர்யாவுக்கு பிடித்துப்போக உடனே கால்ஷீட் கொடுத்திருக்கிறார் சூர்யா. லிங்குசாமி இயக்க அவரின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரிக்கிறது. 

இப்ப சீமான் மேட்டரையும், லிங்குசாமி மேட்டரையும் நினைச்சுக்கங்க....


முன்னணி இயக்குனர்களின் கதை விவாதங்களில் கலந்து கொள்ளும் உதவி இயக்குனர் ஒருவர் மூலம், லிங்குசாமி இயக்கப் போகும் படத்தின் கதை விபரம் சீமானுக்குத் தெரியவந்தது. இதையடுத்து தமிழ்த் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் செயலாளர் ஆர்.கே.செல்வமணியிடம் லிங்குசாமி மீது கதை திருட்டு புகார் ஒன்றைக் கொடுத்தார் சீமான்.

இதையடுத்து இருதரப்பிடமும் விசாரணை நடந்தது. ‘இது என் கதை’ என்பதில் சீமானும், ‘இது என் கதை’ என்பதில் லிங்குசாமியும் உறுதியாக இருக்கின்றனர். பஞ்சாயத்து தீவிரமாக நடந்து வருகிறது. 

- ஆர்.டி.எ(க்)ஸ்.

Powered by Blogger.